கட்டுரை: தி.திவாகரன் எம். இ. (இலண்டன்) 


Ariyanenthiran Candidate half article 04எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கிராமம் தோறும் சென்று தொண்டைத் தண்ணி வற்றும் அளவிற்கு பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலை

ஏன் பகிஸ்கரிக்க கூடாது என்று,லண்டனில் வசிக்கும் தி. திவாகரன் எம். இ அவர்களால் பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும் வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை  மா கிருத்திகா அவர்களால் குரல் வழியாக்கம் பெற்று மீண்டும் தமிழர் தேசிய நலன் கருதி, எமது  இணையத்தள நிர்வாகத்தினரால் எழுத்துருவாக்கப்பட்டு மீள் பிரசுரிக்கப்படுகிறது.

பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவையை செய்யும் வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?

பகிஸ்கரிப்பதானது, வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை மாறாக அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் இருந்தே கணிக்கப்படுகின்றது அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் மொத்த வாக்குகளின் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறும் ஒரு வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலே ஜனாதிபதியாக தெரிவாவார்.

எவ்வளவு அதிகமாக வாக்களிக்கப்படுகின்றதோ அவ்வளவு வாக்குகளில் அவர் 50 வீதத்துக்கு மேல் பெற வேண்டும் ஆனால் பகிஸ்கரிப்பதன் மூலம் குறைந்த வாக்குகளே அளிக்கப்படும் என்பதால் குறைந்த வாக்குகளின் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் ஒருவர் குறைந்த அளவு வாக்குகளுடன் இலகுவாக ஜனாதிபதியாகி விடுவார்.

எனவே நாடளாவிய ரீதியாக பதியப்பட்ட மொத்த வாக்குகளில் ஈழத்தமிழர் கொண்டுள்ள பதியப்பட்ட வாக்குகளின் வீதம் 11% இற்கு மேலாகும். இந்த 11 வீதத்துக்கு மேலான ஈழத் தமிழரும் வாக்களிக்காது பகிஸ்கரித்தால் மிகுதி வாகுகள் 89 சதவீதமாகும். இந்த 89 சதவீதத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகள் என்ற வகையிலேயே முதலாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பு இருக்கும். இதன்படி பகிஸ்கரிப்பதன் மூலம் எதிரி பதியப்பட்ட மொத்த வாக்குகளில் அளிக்கப்பட்ட குறைந்த வீத வாக்குகளோடு இலகுவாக ஜனாதிபதியாக முடியும் அதன்படி பாஸ்கரிப்பு என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதியின் வாக்கு விகிதத்தை அதிகரிக்க உதவியாகவே அமையும் இதன் மூலம் தேர்தலை பகிஸ்கரிப்பதானது வெல்லப் போகும் ஒரு சிங்கள ஜனாதிபதிக்கு திட்டவட்டமாக சேவை செய்யும் ஒரு முறையாகவே அமையும்.

உதாரணமாக பதியப்பட்ட மொத்த வாக்குகளை 100 என்று எடுத்துக்கொள்வோம். நாடு தழுவிய ரீதியில் மொத்தத்தில் 80 வீதத்தினரே வாக்களித்தனர் என்று எடுப்போம் அப்படியாயின் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்பது இதில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை என்று எடுப்போம். எனவே அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியான 78 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்

இதில் 50% வீதம் என்பது 39க்கும் மேற்பட்ட வாக்குகள் ஆகும் அதன்படி 39 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஜனாதிபதியாவார் இந்த அளிக்கப்பட்ட மொத்த 80 வாக்குகளில் தமிழர்களின் வாக்குகள் 10 என்று எடுத்துக்கொள்வோம் ஆனால் இந்த பத்து வாக்குகளையும் அளிக்காது பகிஷ்கரித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எழுபது.

இந்த அளிக்கப்பட்ட 70 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை எனவே செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் 68 இந்த 68 வாக்குகளின் 50 சதவீதம் என்பது 34 வாக்குகளுக்கு மேலான வாக்குகளை பெறும் ஒருவர் முதலாவது சுற்றிலேயே ஜனாதிபதியாக தெரிவாவார் அதாவது 39 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வரவேண்டிய ஒருவர் பகஷ்கரிப்பின் காரணமாக 34க்கு மேலான வாக்குகளை பெற்று இலகுவாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அதேவேளை சிங்களத் தரப்பில் பலம் வாய்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு அவருக்கு வாக்களிக்கப்படும் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளராலும் முதல் சுற்றில் ஐம்பது சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாது.

அப்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட மாட்டாது பின்பு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிகழும் இதிலும் யாரும் 50% வாக்குகளை பெறக்கூடிய சூழல் இல்லை ஏனெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்குகளை சிங்கள கட்சிகள் எதுவும் மக்களிடம் கோருவதும் இல்லை கடந்த எட்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் இப்படி இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை அளித்த நடைமுறை அரசியல் வரலாறும் இல்லை.

இந்த நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒருவரின் வாக்களவிலும் மாற்றம் ஏற்பட இடமில்லை அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்படுகின்ற முதலாவது சுற்று இரண்டாவது சுற்று ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது. அறுதிப் பெரும்பான்மையற்ற சாதாரண பெரும்பான்மை வாக்குகளை மட்டும் கொண்ட ஒரு பலவீனமான ஜனாதிபதியே தெரிவு செய்யப்படமுடியும்.

அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி என்ற அரசியல் யாப்பின் முதலாவது இரண்டாவது விருப்பங்களை இது தோற்கடித்து விடுகின்றது. ஆதலால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அளிக்கப்படும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிங்கள அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதியை கொண்டு வர வழி வகுக்கும். மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மலிந்திருக்கும் இலங்கை அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதி பதவிக்கு வருவது என்பது ஈழத் தமிழருக்கு சாதகமாக அமையும் எதிரி பலவீனம் அடைவது போராடும் இனத்துக்கு லாபகரமானது.

பகிஸ்கரிக்கக் கூறுபவர்கள் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் அதாவது வேறு எந்த ஒரு சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காது சங்குக்கு மட்டும் வாக்களித்துக் கொள்வது பெரிய பகிஸ்கரிப்பாகும் தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை அளித்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகளை சிங்கள வேட்பாளருக்கு அளிக்காது விட்டால் அது சாதாரண பகிஸ்கரிப்பை விடவும் ஒரு உயர்ந்த பகிஸ்கரிப்பாய் அமையும்.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் இரண்டாம் மூன்றாம் விருப்பத்தெரிவு வாக்குகளை அளிக்காது சங்கு சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கூறுகின்றார் அதனால் சங்கு சின்னத்தை ஆதரித்து அதற்கு மட்டுமே வாக்களித்து விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்காமல் விடுவது நேர்க் கணிய ரீதியிலானதொரு பலம் பொருந்திய பாகிஸ்கரிப்பாகும்.

இரண்டும் மூன்றும் கூட்டினால் ஐந்து மூன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் ஒன்று என்பது மூன்றாம் வகுப்பு எண் கணிதம் படித்த ஒரு குழந்தைக்கு கூட புரியக்கூடிய கணக்கு, இதனைத் தமிழ்த் தேசியம் பேசுபவர் புரியவில்லை என்றால் அவர்கள் சிங்களத்துடன் கள்ள உறவில் உள்ளார்கள் என்பதே அர்த்தம். இவற்றுக்கு அப்பால் தமிழர் தம்மை பலப்படுத்த பொது வேட்பாளர் பெரிதும் துணை புரிகின்றது 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகளின் பேராதரவுடன் தேர்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22 தமிழ் ஆசனங்கள் கிடைத்தன.

இப்பின்னணியில் விடுதலைப் புலிகள் வெறுமனே ஒரு ஆயுத இயக்கம் மட்டுமல்ல அது பரந்த மக்கள் ஆதரவைக் கொண்ட ஒரு இயக்கம் என்பதும் ஈழத்தமிழ் மக்கள் உறுதியான தேசிய அபிலாசைகளை கொண்டவர்கள் என்பதும் புலனாகியது. ஆதலால் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தால் மட்டும் போதாது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அழிப்பதற்கு ஜனநாயக ரீதியான தமிழ் ஐக்கியத்தை சீர்குலைப்பதை தமது முதன்மையான இலக்காக கொண்டு முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் ஈழ தேசிய ஐக்கியத்தை முதலில் கட்சி ரீதியாக சிதைக்கும் நடவடிக்கையை எதிரி மேற்கொள்ள தொடங்கினார்.

தமிழ் தேசியத்திற்கு இருந்த 22 ஆசனங்களை சுமாராக அரைவாசியாக வெட்டித் தறிப்பதில் எதிரி வெற்றியீட்டியுள்ளதுடன் தமிழ்த் தேசியம் பேசும், இருக்கக்கூடிய ஆசனங்களையே எதிரி பல கூறுகளாக உடைத்துள்ளார். இதன் மூலம் பல மற்றதாய் காணப்படுவது மட்டுமல்ல அது அழிந்து கொண்டு போகின்றது என்ற ஒரு அரசியல் அலையை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்துவதில் எதிரிகள் அரைவழி வெற்றி பெற்றார்கள்.

இத்தகைய சூழலில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான சட்ட சூழலை பயன்படுத்தி அவரது நிர்வாகத்தில் நடக்கும் தேர்தலை எமக்கு சாதகமாக ஒரு களமாக மாற்றவும் தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு வரப்பிரசாதமாய் உள்ளது.

ஈழத் தமிழரால் ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது களநிலையில் அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை ஆனால் எதிரியின் தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்கள் அவாவுறும் தமிழ் தேசியம், ஐக்கிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற மூன்றும் ஒன்று திரண்ட அரசியல் வாழ்வியல் பலத்தை வெளிக்காட்ட முடியும்.

நான் நீ அவன் இவன் அது இது என்ற தன்முனைப்புக் கொண்டு, நமக்கு இடையே சண்டை இட்டு தமிழ் தேசியத்தை பலியிடாது தமிழ் தேசியத்திற்காய் ஒரு பொதுக் குரலாய் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமுகப்பட்டு சங்கு சின்னத்தை முதன்மைப்படுத்தி பெரு வெற்றி ஈட்ட வேண்டும். எதிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பு ஒன்றுமே பூரணத்துவமாய் ஆரம்பிக்கப்படுவதில்லை குறைபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சி போக்கில் குறைகளை கடந்து முன்னேறும்.

மேலும் ஒரு தத்துவ கோட்பாடு உண்டு, அதாவது ஒரு விடயத்தில் ஆயிரம் முரண்பாடுகள் இருப்பினும் ஒரு செயற்படு புள்ளியில் இரு அணியாகவே பிளவுபடும் இதில் நடுநிலை என்பது செயற்படு அர்த்தத்தில் வெல்லும் பக்கமாகவே அமையும். எனவே நடுநிலை என்பதற்கு இங்கு இடம் இல்லை பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது என்பது தமிழ் தேசியம் இல்லாவிடில் எதிர்பக்கம் என்கின்ற இரண்டு அணிகளுள் தமிழ் தேசியத்தின் எதிரியோடு கூட்டுச் சேர்வதாகவே அமையும் இதுதான் அரசியல் தத்துவம் சொல்லும் அடிப்படை உண்மை.

ஈழத்தமிழ் மக்கள், ஐக்கியம், ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற உன்னதமான தேசிய அபிலாசைகளை சொல்லிலும் செயலிலும் தோற்றத்திலும் காட்சிப்படுத்தக் கூடிய வகையில் முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளரை ஆதரித்து அதனை முன்னெடுப்பதானது முள்ளிவாய்க்காலுக்கு பின்னான கால வீழ்ச்சியில் இருந்து எழப்போகின்றோம் என்ற செய்தியை பறைசாற்றுவதாகும்.

பேரினவாத ஒடுக்குமுறையால் மூன்று லட்சம் அப்பாவி மக்களை இழந்துள்ள போதிலும் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைகள் தாய்மார் கர்ப்பிணி தாய்மார்கள் பெண்கள் நோயாளிகள் முதியோர் இளையோர் என இனப்படுகொலைக்கு உள்ளான போதிலும், 3 இலட்சத்து 46,000 ராணுவ இரும்பு சப்பாத்துக்கு கீழும் விதைத்து விட்டாற் போல் இருக்கும் மேலதிக பொலிஸ் படைகளின் ஒடுக்கு முறைகளுக்கு கீழும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வு பணியாளர்களின் கழுகு செயற்பாடுகளின் கீழும், எதிரியினாலும் எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழ் தலைவர்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்னா பின்னமாய் உடைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்கள் தம் தேசிய அபிலாசைகளையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழக்கத் தயார் இல்லை என்பதை உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்ட தம் பலத்தை தாம் உணர்ந்து முன்னேற தமிழ் பொது வேட்பாளரை பெருவெற்றி அடையச் செய்ய வேண்டும்.

சங்கை தமிழ் தேசியத்தின் நாதமாய் ஒலித்து காட்ட வேண்டும் இதற்கு செயல் வடிவம் ஊட்டிட எம் இனமே எழுந்து வாருங்கள் தேசமாய் திரண்டு வாருங்கள் உங்கள் வாக்குதனை சங்கு சின்னத்திற்கு உவந்தளியுங்கள் என இருகரம் கூப்பி வேண்டி நிற்கின்றோம்.